articles

img

தேசிய கிராம வங்கியை உருவாக்கி கிராம வங்கிகளை பலப்படுத்துக...

நம் நாட்டில் உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு மிகப் பெரிய அளவில் சேவை செய்து வருகின்ற கிராம வங்கிகளின் தற்போதைய கட்டமைப்பை சிதைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரத்தையே சீரழிக்கும் வேலையில் இறங்கியுள்ளது இன்றைய ஒன்றிய அரசு. 

தங்களது அவசர பணத் தேவைகளுக்காக கந்துவட்டி பண முதலைகளிடம் சிக்கியிருந்த கிராமப்புற ஏழை, எளிய மக்களை அதிலிருந்து மீட்கும் வகையிலும், விவசாயத் துறைக்கு அதிக அளவில் கடன்கள்கிடைக்கும் வகையிலும் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஓர் அவசர சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1976 ஆம் ஆண்டு சட்டமாக மாற்றப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டவை தான் கிராம வங்கிகள். இந்த கிராம வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்குகள் 50 சதவீதம் என்ற அளவிலும், கிராம வங்கிகளை நிர்வகிக்கும் வங்கிகளின் பங்குகள் 35 சதவீதம் என்ற அளவிலும், அந்தந்த மாநில அரசு களின் பங்குகள் 15 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும்.

கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கிராம வங்கிகளின் பங்களிப்பு
சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர் போன்ற நாட்டின் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு முறைப்படுத்தப்பட்ட கடன்கள் கிடைக்கச் செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்வங்கிகள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக அளப்பரிய சேவை ஆற்றி வருகின்றன. ஆரம்ப கால கட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கிராம வங்கிகள் துவக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு முழுவதும் சுமார் 196 கிராம வங்கிகள் இருந்தன. பின்னர் அவை மூன்று கட்டங்களாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு தற்போது 43 வங்கிகளாக உள்ளன. நாடு முழுவதும் 27 மாநிலங்களில், 639 மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளன இவ்வங்கிக் கிளைகள்.

22,000 கிளைகள்
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 22,000 கிளைகளைக் கொண்டுள்ள கிராம வங்கிகள், அவற்றில் சுமார் 21,000 கிளைகளை கிராமப்புற பகுதிகளில் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீதத்திற்கும் அதிகமான கிளைகள் வங்கிகள் அற்ற பகுதிகளில் அமைந்துள் ளன. நாடு முழுவதும் பரந்து விரிந்த கிளைகள் மூலமாக, சாமானிய மக்கள் எளிதாக அணுகும் வகையில் கிராமப்புற வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன இந்த கிராம வங்கிகள்.நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளின் மொத்த வணிகம் 8,60,428 கோடி ரூபாயாகவும், மொத்த கடன் அளவு 3,35,208 கோடி ரூபாயாகவும் உள்ளன.இவற்றில் ஏறக்குறைய 90 சதவீத கடன்கள்முன்னுரிமைத் துறைகளின் கீழ் சிறு விவசாயி களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் கொடுக்கப்பட்டவை என்பதும், இவை நூற்றுக்கணக்கான நுண் நிதி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக வழங்கிய கடன்களின் மூன்று மடங்கைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

7.7 கோடி ஜன் தன் கணக்குகள்
மேலும் ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில், கிராம வங்கிகளோடு ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்றே சொல்லலாம். உதாரணமாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கிராம வங்கிகள் 7.7 கோடி கணக்குகள் துவக்கியிருக்கும் நிலையில் அனைத்து தனியார் வங்கிகளும் சேர்ந்து 1.26 கோடி கணக்குகள் மட்டுமே துவக்கியுள்ளன.

ஆபத்தான பரிந்துரைகள்
சமீபத்தில் ஒன்றிய அரசு, கூடுதல் நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையில், கிராம வங்கிகள் அவற்றின் லாப அளவுகளின் அடிப்படையில் A, B, Cஎன்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட வேண்டும் என்றும், கிராம வங்கிகளில் உள்ள ஒன்றிய அரசின் 50 சதவீத பங்குகள் அவ்வங்கிகளை நிர்வகிக்கும் வங்கிகளிடம் விற்கப்பட வேண்டும் என்றும், ஹ வகுப்பு கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கலாம்என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

கிராம வங்கிகளை இவ்வாறு லாப அடிப்படையில் பிரிப்பது என்பது மிகவும் மோசமான முடிவு. இது கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையேசிதைப்பதற்கு ஒப்பாகும். கிராம வங்கிகளிலுள்ள ஒன்றிய அரசின் பங்குகளை நிர்வகிக்கும் வங்கிகளிடம் விற்பது என்பது, ஒன்றிய அரசு முற்றிலுமாக தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதுடன், கிராம வங்கிகளை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையின் முதல் கட்டம் என்றே கருதவேண்டும்.

தனியார்மயம்
மேலும் ஹ வகுப்பு வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் அபாயகரமானது. கடந்த 2015 ஆம் ஆண்டு மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட கிராம வங்கிகள் திருத்தச் சட்டம், ஒன்றிய அரசு, கிராம வங்கிகளில் உள்ள பங்குகளில் 49 சதவீதம் அளவிற்கு தனியாருக்கு விற்பனை செய்வதற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த சட்டத்திருத்தத்தின் பகுதி 2(A) வின்படி அரசாங்கம் ஒரு நிர்வாக அறிவிப்பின் மூலமாகவே கிராம வங்கிகளிலுள்ள  பங்குகளை 49 சதவீதத்திற்கும் அதிகமாகவிற்பனை செய்து கொள்ளலாம். எனவே இந்த சட்டத்தின் நோக்கம் என்பது நிர்வாக நடவடிக்கைகள் மூலமாகவே கிராம வங்கிகளை தனியாரிடம் முழுவதுமாக தாரை வார்ப்பதாகும்.

நம் நாட்டில் கிராம வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த சூழ்நிலையிலும், நாட்டின் கிராமப்புற மக்கள் தொகையில் ஒரு கணிசமான பகுதியினருக்கு இன்று வரை நிறுவனக் கடன்கள் கிடைக்காமல், அம்மக்கள் தங்கள் அவசிய செலவுகளுக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அப்படியெனில் இதற்கு தீர்வுதான் என்ன?

கிராம வங்கிகளை, அவ்வங்கிகளின் பங்கு களைக் கொண்டிருக்கக்கூடிய பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பதுதான் சரியான தீர்வு என்று ஊழியர்களின் ஒரு பிரிவினர் கூட கருதுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது தவறான, முழுப் புரிதலற்ற பார்வை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய மொத்த கடனில்40 சதவீதம் வரை மட்டுமே சாதாரண மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக வழங்கும் நிலையில், கிராம வங்கிகள் அதற்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக சுமார் 90 சதவீத கடன்களை முன்னுரிமைக் கடனாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கிராம வங்கிகள் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டால் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பெருமளவில் குறையும். இது கிராம வங்கிகள் உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு நேர் எதிராக அமையும்.

தேசிய கிராம வங்கியின் அவசியம்
எனவே நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே தேசிய கிராம வங்கியாக உருவாக்குவதே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு இணைக்கப்படும் போது, அது தனது பரந்து விரிந்த கிளைகளின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் அளவை ஒத்ததாக இருக்கும். இதன் மூலம் நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு சிறந்த வங்கி சேவை வழங்க முடியும். தற்போதைய சூழலில் சிலகிராம வங்கிகள் பூகோள ரீதியாக அவை அமைந்திருக்கும் இடம், அவற்றின் அளவு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பின்மை போன்றவற்றால் சிறிதளவு நட்டத்தை சந்தித்து வருகின்றன. இவை ஒன்றாக இணைக்கப்பட்டு தேசிய கிராம வங்கி உருவாக்கப்படும் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்படும் இத்தகைய நட்டம் மற்ற பல பகுதிகளில் இருந்து கிடைக்கும் லாபத்தால் சரி செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக லாபமீட்டும் வங்கியாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் சிறிய தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதிநிறுவனங்களுடன் கிராம வங்கிகள் தொழில்நுட்ப ரீதியில் போட்டியிட வேண்டிய தேவை உள்ளது. எனவேஇவ்வங்கிகள் இணைக்கப்பட்டு ஒரே தேசிய கிராம வங்கியாக உருவாகும் போது, அது தொழில்நுட்ப ரீதியிலும் மிக விரைவாக முன்னேறும் வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கிளைகள் திறப்பதன் மூலமாக தேசிய கிராம வங்கி மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.

கடந்த 45 வருடங்களில் மூலதனமாக ஒன்றிய அரசின் மூலம் கிராம வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 7,000 கோடி ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கார்ப்பரேட் வரி குறைப்பு, சுங்கவரி தள்ளுபடி மற்றும் கலால் வரி தள்ளுபடி என்ற வகையில் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளது ஒன்றிய அரசு. எனவே கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திடும் வகையில், உடனடியாக கிராம வங்கிகளுக்கு தேவையான மூலதனத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.ஒன்றிய அரசு, கிராம வங்கிகளை சிதைக்கும் முயற்சிகளை கைவிட்டு, 43 கிராம வங்கிகளை ஒன்றிணைத்து தேசிய கிராம வங்கியை உடனடியாக உருவாக்கி அதனை பலப்படுத்திட வேண்டும்.

கட்டுரையாளர் : சி.பி.கிருஷ்ணன்

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

 தமிழில்: க சிவசங்கர், நெல்லை
 

;